குழந்தை பருவத்திலே கற்பனை திறன் ஏன் முக்கியமானது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

குழந்தைகள் என்றாலே துருதுருவென அதிக சேட்டையுடன் காணப்படும். அதே நேரத்தில் அதற்கு நிகரான அதீத கற்பனை சக்தியையும் குழந்தைகளிடம் மட்டுமே காண முடியும்.  ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு என யாரேனும் ஒருவர் சொல்லி நாம் கட்டாயம் கேட்டிருப்போம். அப்படியான தனித்திறமையை பலர் சிறு வயதில் அறிந்ததே இல்லை. இன்னும் பலருக்கும் இதே நிலைமை தற்போது வரை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

காரணம் நாம் தனி திறமையை ஏதேனும் ஒரு கட்டத்தில் வெளிக்கொணர்ந்திருந்தாலும் அதை வளர்த்தெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டோம். நம்மை சுற்றியுள்ளவர்களும், பெற்றோர்களும் அதில் பெரிதாக கவனம் செலுத்தி இருக்க மாட்டார்கள். இந்த தனித்திறமையை நாம் அறிவதே கற்பனையின் வாயிலாக தான். நாம் சிந்திக்கின்ற விஷயங்களை  வெறும்  கற்பனையாக விட்டு விடாமல் நிஜத்தில் செயல்படுத்தி  அதை உண்மையாகுவதே வெற்றியாகும்.

நம்மில் பலர் கற்பனைக்கு உருவம் கொடுக்காமல், அதை உண்மையாக்க  ஆசைப்படாமல் அப்படியே விட்டுவிடுவோம். அதற்கு பல காரணங்கள் காரணிகளாக இருக்கலாம். ஆனால் காரணங்களை காரணிகளாக ஆக்காமல் தனக்கு தோன்றக்கூடிய விஷயங்களை செய்து காட்டியவர்கள் பலராலும் பாராட்டத்தக்க கூடிய மனிதர்களாக இருக்கிறார்கள்.

அதற்கு அப்துல் கலாம், ஜி.டி நாயுடு, சர்.சி.வி ராமன், நிகோலஸ் டெஸ்லா எல பல மனிதர்களை உதாரணமாக கூறலாம்.  கற்பனை இல்லாமல் வாழக்கூடிய மனிதனே இல்லை. சிந்தனை திறன் மட்டுமே மனிதனை பிற விலங்குளிடமிருந்து பிரித்து காட்டுகிறது. கற்பனை திறனுக்கான முக்கியத்துவத்தை நாம் குழந்தை பருவத்திலிருந்தே புரிய வைத்தால் பிற்காலத்தில் அவர்கள் சாதனை படைப்பதற்கு பெருந்துணையாக இருக்கும். அதை எப்படி குழந்தைகளிடம் வளர்ப்பது என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழலாம்.

உதாரணமாக ஓர் குழந்தைக்கு ஓவியம் வரைவதில் நல்ல ஆர்வம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தை தனக்குத் தோன்றிய ஏதேனும் ஒரு நிகழ்வை அல்லது ஒரு பொருளை படமாக வரைந்து, உங்களிடம் வந்து காண்பித்தாள் படத்தில் இருப்பது என்ன என்ற கேள்வியை மட்டும் குழந்தைகளிடம் கேட்டு விடாதீர்கள். மாறாக, அது என்னவென்று உங்களுக்குத் தெரியாத பட்சத்திலும், அதை விளக்கும்படி குழந்தைகளிடமே கேளுங்கள்.

அவர்கள் தாங்கள் யோசித்த விதம்ம், அதை படத்தில் எப்படி வரைந்து இருக்கிறார்கள் என விளக்கம் அளிக்கும் அந்த தருணம் உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். இப்படியாக குழந்தைகளை சிந்திக்க வைத்து அவர்களிடையே கேள்விகளை எழுப்பி, கேள்விகளுக்கான பதில்களை முறையாக கற்றுக் கொண்டு விளக்கம் அளிக்கும்படி அவர்களை தயார் படுத்தினால் அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைவதில் எந்த மாற்றமும் இல்லை.