விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள். அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை. அக்டோபர் 12 சனிக்கிழமை விஜயதசமி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை வருவதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகர்கோவில், சேலம், கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற ஒன்பதாம் தேதி 225 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

அக்டோபர் 10ஆம் தேதி கூடுதலாக 850 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 9-ஆம் தேதி கூடுதலாக 35 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பத்தாம் தேதி கூடுதலாக 265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும்பெங்களூரு, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தினங்களில் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து 13-ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் வருவதற்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.