எல்லைப் பிரச்னையை பாகிஸ்தான் நிறுத்தாத வரையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர்கள் நடைபெறாது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்..

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக பதட்டமான உறவுகள் உள்ளன. இதுவரையில்  எல்லையில் பாகிஸ்தான் பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்திய அரசு இதுவரை பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு முதல் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் கூட விளையாடவில்லை. எனவே இந்த இரு அணிகளும் இப்போதுதான் ஐசிசி நடத்தும் பெரிய நிகழ்வு மற்றும் ஆசியக் கோப்பை போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடுகின்றன. எனவே தான் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்காக கிரிக்கெட் உலகமே காத்திருக்கிறது. ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி சமீபத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் இன்று மோதுகின்றன. இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர் குறித்து பெரிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த  போட்டியாளர்களுக்கு இடையிலான இருதரப்பு தொடர் குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனுராக் தாக்கூர் என்ன சொன்னார்?

பாகிஸ்தானுடனான இருதரப்பு போட்டி எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் கூறுகையில், ‘பயங்கரவாதம், எல்லை தாண்டிய தாக்குதல்கள் மற்றும் ஊடுருவலை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று பிசிசிஐ நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்திருந்தது.  நாட்டின் உணர்வும், சாமானியர்களின் உணர்வுகளும் இதனுடன் ஒத்துப்போகிறது.ஒவ்வொரு குடிமகனின் உணர்வு என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்..

அனந்த்நாக் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த பதில் :

புதன்கிழமை அனந்த்நாக்கில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூரின் இந்த அறிக்கை வந்துள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகளும் ஒரு ராணுவ வீரரும் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில், ஒரு உயர் போலீஸ் அதிகாரியும் தனது உயிரை தியாகம் செய்ய வேண்டியிருந்தது.

இதற்கிடையில், வரும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. இந்த போட்டியை விட, கிரிக்கெட் ரசிகர்கள் அக்டோபர் 14 ஆம் தேதியை எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் அக்டோபர் 14 ஆம் தேதி, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.