அருணாச்சல பிரதேசம் அருகே, சீனா புதிய ஹெலிகாப்டர் தளம் அமைத்து வருகிறது என்ற செய்தி இந்திய ராணுவ வட்டாரங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தளம் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தின் நியிஞ்சி மாகாணத்தில் கோங்கிரிகாபு ஆற்றின் அருகில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட படங்களில் எந்த கட்டுமானமும் இல்லை என்று தெரிய வந்த நிலையில், 16 செப்டம்பர் 2024 அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில், 600 மீட்டர் ஓடுபாதையுடன் கூடிய புதிய ஹெலிகாப்டர் தளம் தெளிவாக பார்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஹெலிகாப்டர் தளம், சீனாவின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறன்களை பலப்படுத்துவதற்கான முயற்சியாகவே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மலைப்பகுதிகளில் இயல்பாக ஹெலிகாப்டர்கள் செயல்படுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்க இந்த தளம் பயன்படுத்தப்படும் எனும் கருத்து உள்ளது. மேலும், மூன்று ஹேங்கர்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வசதி போன்றவற்றுடன் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கனவே நிலவும் எல்லைப் பிரச்சனைகள் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனாவின் இக்கட்டுமான நடவடிக்கை இரு நாடுகளின் இடையேயான நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.