
இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் இந்திய தொழிலாளர்கள் 10 பேரை வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவர் பாலஸ்தீனிய கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய தொழிலாளர்கள் அங்கு சிக்கிக் கொண்டனர். அவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர்கள் இஸ்ரேலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக அவர்கள் அந்த பாலஸ்தீன கிராமத்தில் சிக்கிக் கொண்டு அங்கிருந்து இஸ்ரேலுக்கு வர முடியாமல் தவித்தனர்.
அந்த சமயத்தில் நேற்று இரவு இஸ்ரேல் மக்கள் தொகை மற்றும் குடியுரிமை அதிகாரிகள் ஜெருசலேம் பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்களுக்கு இந்திய தொழிலாளர்கள் அங்கு சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் பின் அங்கிருந்து அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் இது பற்றிய செய்தியை இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.