
அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துரையை அடுத்த இலுப்பையூர் கிராமத்தில் கருணாமூர்த்தி (50) வசித்து வருகிறார். இவர் விவசாய நிலங்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் முகம் தெரியாத நபர் ஒருவர் இவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆன்லைனில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் பார்க்கலாம் என ஆசை வார்த்தை கூறி கருணாமூர்த்தியை ஏமாற்றியுள்ளார்.
இதனை அடுத்து இவரது குழுவினர்கள் பல்வேறு எண்களில் இருந்து கருணாமூர்த்தியை தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். அவர்கள் கூறியதை நம்பி கருணா மூர்த்தி 71,28,770 ரூபாயை வங்கி கணக்கு ஒன்றில் செலுத்தியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது அறிந்த கருணாமூர்த்தி மன அழுத்தத்திற்கு ஆளானார். இதனால் கடந்த மே மாதம் சைபர் கிரைமில் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் மோசடி கும்பல் கோவை மாவட்டத்தில் உள்ளது என்பதை கண்டறிந்தனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் போத்தனூர் பகுதியை சேர்ந்த ரியாஸ் கான் (27), பாப்பநாயக்கன்புரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (47), குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ரம்யா(28) என்பவர்கள் என தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு லேப்டாப்,2 பேங்க் பாஸ்புக், 4 மொபைல் போன்கள், போலி முத்திரை சீல்கள் மற்றும் 2,23,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.