ஈரானில் பிரபல பாப் பாடகர் ஆக இருப்பவர் அமீர் உசைன் மக்சவுத்லூ (37). இவர் தனது உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். இவர் பொதுவாக ‘டாட்டாலூ’ என்று அழைக்கப்படுவார். இந்நிலையில் இவர் அடிக்கடி இளைய தலைமுறையினரின் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்நிலையில் இவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாகவும், விபச்சாரத்தை ஊக்குவித்தல், அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தல் போன்ற காரணங்களால் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் இவர் கடந்த 2018 ம் ஆண்டு துர்க்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்தார். பின்னர் துருக்கி காவல்துறையினர் அவரை கடந்த 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானிடம் ஒப்படைத்தது.

அதன் பின்னர் இவர் ஈரானில் உள்ள தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தெய்வ நிந்தனை தொடர்பான வழக்கில் இவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் பின் இந்த வழக்கு விசாரணையின் போது, அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு சார்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது என்று உள்ளூர் செய்தியில் வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும் மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.