
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்கார பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து திருடி தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன்பின் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமிருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. இதனிடையே புகாரில் தெரிவித்ததை விட கூடுதலான நகைகள் கிடைத்ததால் அதுகுறித்த விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர்.
அதன்படி, ஈஸ்வரி ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளிலும் நகைகளை திருடி இருக்கலாம்? என்ற சந்தேகம் நிலவியது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஐஸ்வர்யாவை தொடர்புக்கொண்டு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எவ்வளவு? என்பது தொடர்பான விவரங்களை முழுமையாக கணக்கு பார்த்து தெரிவிக்குமாறு கேட்டனர்.
அதனை தொடர்ந்து தன் வீட்டிலிருந்த நகைகள் குறித்த விவரங்களை முழுமையாக ஆராய்ந்து 2-வதாக அவர் புகாரளித்திருந்தார். 2வது புகாரில் தன் வீட்டில் மொத்தமாக 200 பவுன் நகை கொள்ளைப்போனதாக குறிப்பிட்டு இருந்தார். பின் ஐஸ்வர்யா அளித்த 2-வது புகாருக்கு அடுத்தே காவல்துறையினர் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது 45 -50 பவுன் நகை ஈஸ்வரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும் வெங்கடேசனிடம் இருந்து ரூ.45 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 2 நாள் காவலுக்கு பின் அவர்கள் இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஈஸ்வரி, வெங்கடேசனுக்கு ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.