பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் சையிப் அலிக்கான். இவர் தனது வீட்டில் இருந்த போது, மர்ம நபர் ஒருவர் புகுந்து கத்தியால் அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சமீபத்தில் அவர் வீடு திரும்பினார். இதற்கிடையே சையிப் அலிகானை கத்தியால் குத்தியவர் என்று முகமது ஷரிபுல் என்பவரை கைது செய்தனர்.

அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் தனது தாயின் மருத்துவ செலவுக்காக இந்த சம்பவத்தை செய்ததால் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் கைது செய்யப்பட்டவரின் தந்தை சிசிடிவி-யில் இருப்பது எனது மகன் இல்லை என்றும், அவரை தவறாக கைது செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் சையிப் அலிகான் வீட்டில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் எதுவும் அந்த குற்றவாளியின் கைரேகையுடன் பொருந்தவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் கூடுதல் மாதிரிகளை மீண்டும் ஒருமுறை சோதனைக்கு அனுப்ப மும்பை காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.