இஸ்ரேல்- காசா கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி அமலுக்கு வந்த போர் ஒப்பந்தங்களை மீறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை காசாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் நடத்தியுள்ளது. இதில் மவாரி, கான்யூனீஸ், அல்தராஜ், ராபா ஆகிய பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 100க்கும் அதிகமானோர்  உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சிரியா, லெபானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கியுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ தெரிவித்ததாவது, போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பிணைக் கைதிகளை விடுக்க மறுப்பது மற்றும் அனைத்து போர் நிறுத்த திட்டங்களையும் நிராகரித்தது போன்ற ஒப்பந்தங்களை மீறிய நடவடிக்கைகளில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிணைக் கைதிகள் விடுவிப்பதில் ஹமாஸ் அமைப்பு விதிகளை மீறி உள்ளது. எனவே கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.