ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சாந்தனு (14) என்ற சிறுவன், தனது தந்தை சுகதேவுடன் கடந்த 9ம் தேதி கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சோவ் மெய்ன் கேட்டுள்ளனர். ஆனால் 30 நிமிடம் ஆகியும், கடையின் உரிமையாளர் அவர்களுக்கு சோவ் மெய்ன் கொடுக்கவில்லை. இதனால் சுகதேவ் கடையின் உரிமையாளரான மாலிக்கிடம் காரணத்தை கேட்டார். அப்போது மாலிக், அவரை அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு வந்த சாந்தனு எதற்கு என்னுடைய தந்தையை அடித்தீர்கள் என்று கடையின் உரிமையாளரிடம் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் மாலிக்வுடன் சேர்ந்து மற்றவர்களும் சிறுவனை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சிறுவன் மற்றும் அவரது தந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் சிறுவன் சாந்தனுவின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தலைமறைவான மாலிக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் BJD-வின் உள்ளூர் தலைவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.