
உத்திர பிரதேச மாநிலத்தில் நஜீபாபாத் பகுதியில் தீபக்குமார்(29) -சிவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் தீபக்குமார் ரயில்வே பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சிவானியை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீபக்குமார் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்று சிவானி உறவினர்களிடம் கூறினார்.
அப்போது தீபக்குமாரின் கழுத்தில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வலியுறுத்தினார்கள். அதன்படி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வெளிவந்த ஆய்வில் ஊசி போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கணவனை கொலை செய்த சிவானியை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது கணவன் இறந்த பிறகு அவருடைய வேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் ஆசையில் தான் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். தற்போது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2வது நபர் யார் என்று காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.