தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக உள்ள சாலையில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்  பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கெரக்கோட அள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான ஒரு டன் குட்கா இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் விசாரித்ததில் இது கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுவதாக தெரிய வந்தது. அதோடு அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா என்பதும் தெரியவந்தது. அதன் பின் காவல்துறையினர் மகேந்திராவை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.