மதுரை திருமங்கலம் முகமது ஷா புறத்தில் வசித்து வருபவர் தான் துளசி நாதன். தொலைபேசி கோபுர பராமரிப்பு பணி செய்து வரும் இவருக்கு, விஜயலட்சுமி என்ற மனைவியும் சஷ்டிகா(6) என்ற மகளும் உள்ளனர். இவர் இன்று காலை தனது மகளுடன் திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரி குளம் விளக்கு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சென்னையில் இருந்து நாகர்கோயில் நோக்கி சென்ற மகிழுந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழி சாலையில் இருந்த தடுப்பை தாண்டி சர்வீஸ் ரோட்டில் நடைபயணம் மேற்கொண்டிருந்த தந்தை மகள் மீது மோதியதில் குழந்தை சஷ்டிகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து துளசி நாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஷ்டிகா உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.