
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சனாதன பாசிசத்தை எதிர்த்து விமர்சிக்க கூடிய அனைவருமே இந்து அடையாளத்தை கொண்டவர்கள் தான். யாரும் கிறிஸ்தவர் இல்லை, முஸ்லிம் இல்லை, பவுத்தர் இல்லை, சீக்கியர் இல்லை, சமணர் இல்லை. இந்து அடையாளத்தை கொண்டவர்களே இதை விமர்சிப்பதற்கு என்ன காரணம் என்பதை ஒரு கணம் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சாதாரண மக்களின் கடவுள் நம்பிக்கையை பற்றியோ…. மத நம்பிக்கையை பற்றியோ.. பேசவில்லை. சனாதனத்தை தங்களின் மூலதனமாக பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ஆதாயம் தேடுகின்ற சங்பரிவார்களின் இந்துதுவா செயல் திட்டத்தை தான் சேகர்பாபு உட்பட அனைவரும் விமர்சிக்கிறோம். இதை பெரும்பான்மை இந்து மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். ஆகவே தான் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவை நல்கி வருகிறார்கள். இந்தியா முழுவதும் இந்த ஆதரவு பெருகி வருகிறது.
அண்ணாமலை போன்றவர்கள் சனாதன சக்திகளுக்கு பணிவிடை செய்யக்கூடிய சேவர்களாக இருக்கிறார்கள். அது அவர்களுக்கான பிழைப்பு வாதம். அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அண்ணாமலை இருக்கிறார் என்று சொன்னால் ? அவர் யாருக்காக சேவை செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நீண்ட காலமாக வர்ணாஸ்ரம தர்மம் இந்து சமூக கட்டமைப்பிலே… குலத்தொழிலை நிலைப்படுத்தி உள்ளது. அவரவர் தொழிலை அவரவர் செய்ய வேண்டும். அவரவர் குலத்தில் அவரவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது தான் சனாதனத்தின் அடிப்படை.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு உண்டு என்பதும், மேல் சாதி கீழ் சாதி பாகுபாடு உண்டு என்பதும், சூத்திரர்கள் – பஞ்சமர்கள் – பெண்கள் உட்பட அனைவருக்கும் தீட்டு உண்டு என்பதும், அவரவர்களுக்கான குல தொழிலை, அவரவர் செய்ய வேண்டும், அதை மீறக் கூடாது என்பதும் சனாதனத்தின் அடிப்படையில் கூறுகள். இவை அனைத்தும் தெரிந்தும் திரிபு வாதம் செய்கிற கும்பலில் ஒருவர்தான் அண்ணாமலை என தெரிவித்தார்.