கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெத்தை வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராஜ் சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி வேல்முருகன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வசிக்கும் மகள் பரமேஸ்வரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஏற்கனவே பரமேஸ்வரியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நாராயணன் என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகராஜ் ஒரு மெத்தையை விலைக்கு கொடுத்தார். அந்த மெத்தையின் அளவு சரியாக இல்லாமல் போனதாக தெரிகிறது.

இதனால் பழைய மெத்தையை தானே எடுத்துக் கொண்டு புதிய மெத்தையை மாற்றி தருவதாக நாகராஜ் தெரிவித்தார். இதற்காக மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல் பக்கவாட்டு சுவரில் ஏறி நின்றபடி நாராயணன் மெத்தையை கயிறு கட்டி கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று நாகராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.