
2024 மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் 195 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் 2024 லோக்சபா தேர்தலுக்கான தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதல் கட்டமாக 195 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். 2014 மக்களவைத் தேர்தல் முதல் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.
குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். சர்பானந்த சோனாவால் அசாம் மாநிலம் திப்ரூகர் தொகுதியில் போட்டியிடுகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குஜராத்தின் போர்பந்தர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிடுகிறார்.
மதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். உத்தரபிரதேசத்தின் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியிடுகிறார். கேரளாவில் மலப்புரம் தொகுதியில் அப்துல் சலாம் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். பத்தனம்திட்டா தொகுதியில் ஏகே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி போட்டியிடுகிறார். நடிகர் சுரேஷ்கோபி கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய பிரதேசம் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
34 மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 28 பெண் வேட்பாளர்கள் 47 இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்திற்கு 20 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மத்திய பிரதேசம் 24, குஜராத் 15, ராஜஸ்தான் 15, தெலுங்கானா 9, அசாம் 11, ஜார்கண்ட் 11, சத்தீஸ்கர் 11, டெல்லி 5, ஜம்மு காஷ்மீர் 2, உத்தரகாண்ட் 3, அருணாச்சல பிரதேசம் 2, கேரளா 12 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல கோவா, திரிபுரா அந்தமான், டையூ -டாமன் தலாஒரு தொகுதிக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழக வேட்பாளர்கள் பெயர் இடம்பெறவில்லை..
We're set to announce candidates on 51 seats from Uttar Pradesh, 20 from West Bengal, 24 from Madhya Pradesh, 15 each from Gujarat and Rajasthan, 12 from Kerala, 9 seats from Telangana, 11 from Assam, 11 each from Jharkhand and Chhattisgarh, 5 from Delhi, 2 from J&K, 3 from… pic.twitter.com/hUa5jyOjng
— BJP (@BJP4India) March 2, 2024