பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பகுதியில் சூரியவன்சி வசித்து வருகிறார். இவர் தனது 12 வயது 284 நாட்களில் ரஞ்சிக்கோப்பையில் அறிமுகமானார். இதன் மூலம் சிறிய வயதில் ரஞ்சிக்கோப்பையில் அறிமுகமான இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக யுவராஜ் சிங் 15 வயது 54 நாட்களிலும், சச்சின் டெண்டுல்கர் 15 வயது 23 நாட்களிலும் அறிமுகமாகி இருந்தனர்.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் தொடரில் அவர் 62 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அதிவேக சதம் எடுத்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதன் காரணமாக அவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அப்படி கிடைத்த வாய்ப்பில் நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நாயகனாக மாறியிருக்கிறார். இவரது வெற்றிக்கு பின்னால் ராஜஸ்தான் நிர்வாகம் இருந்தாலும் முக்கிய நபர்கள் அவரின் தந்தை மற்றும் தாய் தான். ஒரு எளிய விவசாய குடும்பம் என்றாலும் அவரின் தந்தைக்கு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஆனால் அவரால் அந்த கனவை நிறைவேற்ற முடியவில்லை என்பதால் தனது மகனை வைத்து அந்த ஆசையை நிறைவேற்ற பாடுபட்டார். மகனின் கிரிக்கெட் பயிற்சிக்காக தனது விவசாய நிலத்தை விற்றதோடு அவரது பிசினஸிலும் தோல்வியை சந்தித்தார். எனினும் அதனை தாங்கிக் கொண்டு கிரிக்கெட் கனவுக்காக தனது ஊரில் இருந்து 100 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பாட்னாவுக்கு தினமும் வைபவை கிரிக்கெட் பயிற்சிக்காக அழைத்து சென்றிருக்கிறார்.

கிட்டத்தட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக தினமும் இந்த பயணம் தொடர்ந்து இருக்கிறது. அதன்படி 9 வயதில் தினமும் காலை 7.30 மணிக்கு பயிற்சியை தொடங்கி மாலை வரை பயிற்சி எடுத்த பின் அவரை மீண்டும் தங்கள் கிராமத்துக்கு அழைத்து சென்று இருக்கிறார். இருவருக்கும் சேர்த்து அவரது தாயார் அதிகாலை 4 மணிக்கு எழுந்து உணவு தயாரித்து கொடுப்பாராம். இப்படியான கடும் கடினமான சூழலில் தீவிர பயிற்சி எடுத்து இன்று இந்தியா கொண்டாடும் ஸ்டாராக வைபவ் சூர்யவன்சி உயர்ந்திருக்கிறார்.