பொதுவான ஆரோக்கியத்திற்கும் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கும் அவசியமான நுண்சத்தாக அமைவது மெக்னீசியம். ஆனால் முக்கியமான இந்த ஊட்டச்சத்தை பெரும்பாலான மக்கள் தினசரி தேவைக்கேற்ப எடுத்து கொள்வதில்லை. வளர்ந்த நாடுகளில் கூட 10-லிருந்து 30 சதவீத மக்களுக்கு குறைபாடு இருப்பது தரவுகளில் தெரியவந்துள்ளது.

மனித எலும்புகளில் புரதம் உருவாக்குதல், எலும்புகளை வலுப்படுத்துதல், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், தசைகள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் ஆகிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது மெக்னீசியம். உடல் சோர்வு பலவீனமாக உணர்தல், குமட்டல், பசியின்மை மற்றும் வாந்தி, மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும். மெக்னீசியம் குறைபாட்டின் அளவு அதிகரிக்கும்போது இதய நோய் தாக்கம், சர்க்கரை நோய், ஒற்றை தலைவலி போன்ற விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும்.

மெக்னீசியம் குறைபாட்டினால் யார் வேண்டுமானாலும் பாதிக்கக்கூடும் என்றாலும் முதியவர்கள், குழந்தைகள், மதுப்பழக்கம் உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களை இந்த சத்து குறைபாடு அதிகம் ஆளாகின்றனர். 19 முதல் 51 வயது உள்ள ஆண்களுக்கு 400 முதல் 420 மில்லி கிராம் மெக்னீசியமும் பெண்களுக்கு 310 முதல் 320 வரை மெக்னீசியமும் தேவைப்படும் நிலையில் திட்டமிடப்படாத அன்றாட உணவில் குறைவான அளவு மெக்னீசியம் மட்டுமே கிடைக்கிறது.

பாதாம் போன்ற உலர் கொட்டை வகைகள், தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், பால் மற்றும் தயிர் ஆகியவற்றில் அதிக அளவு மெக்னீசியம் இருப்பதால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனை இல்லாமல் மெக்னீசிய மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆபத்தானது என எச்சரிக்கின்றனர்.