காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் அய்யர் அவ்வபோது சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் ஈடுபடுவது வழக்கம். அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் காங்கிரசுக்கு எதிராகவே திரும்புவதால் கட்சித் தலைவர்கள் அவரை கண்டித்துள்ளனர். தற்போது ராஜீவ் காந்தியை குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் ராஜீவ் காந்தி விமான பைலட். ஆனால் அவர் தேர்வில் 2 முறை தோல்வி அடைந்துள்ளார். நான் அவருடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தேன். அங்கு அவர் தோல்வியடைந்தார். அங்கு தோல்வி அடைவது என்பது கடினம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவது எளிது. ஏனென்றால் பல்கலைக்கழகம் தனது இமேஜை தக்க வைத்துக்கொள்ள, குறைந்தபட்ச தேர்ச்சி பெறுவதை உறுதிப்படுத்த முயற்சிக்கும்.

பின்னர் அவர் லண்டன் கல்லூரி தேர்விலும் தோல்வி அடைந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பிரதமராக முடிந்தது. அவர் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ஒரு சிறந்த பிரதமர் என்று கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இது காங்கிரஸ் கட்சி தலைமையை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளது. அவரை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.