இமாச்சலப் பிரதேசத்தில் பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான சட்டம் திருத்த மசோதா, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சட்டப்பேரவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தானியராம் ஷாண்டில் இமாச்சல பிரதேச குழந்தை திருமணத்தடை மசோதா 2024ஐ சபையில் அறிமுகப்படுத்தினார்.

இந்த மசோதா இனி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பெண் குழந்தைகளின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகும். அதனை தற்போது மாநில அரசு 21 ஆக நீடித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கு 7 மாதங்களுக்கு முன்பே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிலர் இளமையிலேயே திருமணம் செய்து கொள்வதால் கற்கவும், வாழ்க்கையில் முன்னேறவும் முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

இதனால் திருமணத்திற்கு முன்பே பெண்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், உணரவும் வாய்ப்பை உறுதி செய்கிறது. ஆரம்ப கால திருமணங்கள் பெரும்பாலும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றது.

அது மட்டுமின்றி அவர்களது தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது என்று அவர் குறிப்பிட்டார். முன்னதாக திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை சுக்விந்தர் சுஹு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து டிசம்பர் 8 2023 ம் ஆண்டு பிரதமரின் வழிகாட்டுதலின்படி பெண் குழந்தைகளின் திருமண வயதை உயர்த்துவதற்காக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கை தெரிவிக்கிறது.

இந்தக் குழுவில் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர், ஊரக வளர்ச்சி அமைச்சர், சட்ட அமைச்சர், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதோடு தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குனர் பிரியங்கா வர்மா குழுவின் உறுப்பினர் செயலாளராக இருந்தார்.