கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சி.வி ராமன் நகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ காலனியில் இருந்து விமான நிலையத்திற்கு விங்  கமாண்டர் மற்றும் அவரது மனைவி ஸ்க்வாட்ரான் லீடர் மதுமிதா இருவரும் காரில் சென்றுள்ளனர். அப்போது பின்னாலிருந்து வந்த ஒரு பைக்கில் இருந்த நபர்கள் அவர்களது காரை நிறுத்தி அவர்களிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். இதுகுறித்து விங் கமாண்டர் போஸ் தனது இணையதள பக்கத்தில் தனக்கு நடந்த துயரமான சம்பவத்தை விவரித்துள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், விங் கமாண்டர் போஸ் கூறியதாவது, தனது மனைவி மதுமிதாவை டி.ஆர்.டி.ஓ காலனியில் இருந்து விமான நிலையத்திற்கு காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து ஒரு பைக் வந்து எங்கள் காரை நிறுத்தியது. அந்த பைக்கில் இருந்த நபர் எங்களை கன்னடத்தில் திட்ட தொடங்கினார்.

மேலும் என் காரில் ஒட்டப்பட்டிருந்த டி.ஆர்.டி.ஓ ஸ்டிக்கரை பார்த்து நீங்கள் drdo ஆட்கள் எனக்கூறி என் மனைவியையும் தவறான முறையில் திட்டினார். என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் என் காரில் இருந்து இறங்கியவுடன் அந்த பைக்கில் இருந்த நபர் என் நெற்றியில் ஒரு சாவியால் அடித்ததில் ரத்தம் வழிந்தது. உடனே கோபத்தில் நான் அவர்களை நோக்கி உங்களை பாதுகாக்கும் மக்களை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்களா?, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை சேர்ந்த ஒருவரை இப்படி நடத்துவது நியாயமா? என கத்தினேன்.

ஆனால் அதிகமான மக்கள் அங்கு வந்து எங்களை திட்டத்தொடங்கியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதனை அடுத்து அந்த நபர் ஒரு கல்லை எடுத்து என் காரை தாக்க முயன்றார். அது என் தலையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதுதான் இங்கு எங்கள் நிலை என்று அந்த அதிகாரி மிகவும் வருத்தத்துடன் கூறினார். மேலும் பாதுகாப்பு படை அதிகாரி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தபோதும் அங்கு எந்த பதிலும் இல்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

உண்மையையும் எதார்த்தத்தையும் பார்க்கும்போது கர்நாடகா இப்படித்தான் மாறிவிட்டது. இதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுள் நமக்கு உதவட்டும் .கடவுள் எனக்கு பதிலடி கொடுக்க சக்தி கொடுங்கள். நாளை சட்டம் ஒழுங்கு நமக்கு உதவவில்லை என்றால் நானே பதிலடி கொடுப்பேன் என்று அந்த அதிகாரி அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

ஆனால் இந்த தாக்குதல் ஏதாவது தூண்டுதலோடு நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக நடத்தப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, அதிகாரப்பூர்வ எந்த ஒரு புகாரும் காவல் நிலையத்திற்கு அளிக்கப்படவில்லை எனவும், அந்த வீடியோவை வைத்து அந்த அதிகாரியை கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த அதிகாரியின் மனைவியை அடையாளம் கண்டு சரியாக என்ன நடந்தது என்பதையும் கண்டறிய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இந்திய விமானப்படை இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.