
இந்தியாவில் பிரபல வைர வியாபாரிகளாக இருந்தவர்கள் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் கோக்சி. இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 14,000 கோடி கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையில் கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த கோக்சி, டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
அதன் பின் பெல்ஜியத்தில் தஞ்சமடைந்தார். இவரது மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன் மூலம் கோக்சியும் பெல்ஜியத்தில் தற்காலிகமாக குடியுரிமை பெற்றார் இவருக்கு எதிராக 2 பிடிவாரண்ட்டுகளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்தது. இந்நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு செல்ல இருந்த கோக்சியை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட இவர் பெல்ஜியம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ காரணங்களை கோக்சி மேற்கோள் காட்டி ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். இதனால் உடனடியாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.