
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு திருமணம் செய்வதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்து வைத்துள்ளார். அதே இணையதள பக்கத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரியா என்ற பெண்ணும் பதிவு செய்து இருந்தார். இதனைத் தொடர்ந்து பிரியா அந்த இளைஞரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இருவருமே தொலைபேசி எண்களை பரிமாறி வாட்ஸ் அப் மூலமும் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரியா தனது சகோதரிக்கு உடல்நிலை பாதிப்பால் மிகவும் அவதிப்படுவதாகவும் அவருக்கு அவசரமாக சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறி அந்த இளைஞரிடம் பணம் பெற்றுள்ளார். இதனை நம்பி அந்த இளைஞர் இதுவரை சுமார் 7 லட்சம் ரூபாய் பிரியாவிடம் கொடுத்துள்ளார். சில நாட்களிலேயே பிரியா அந்த இளைஞரை தொடர்பு கொள்வதை நிறுத்தியுள்ளார். அவரது நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அந்த இளைஞர் நாமக்கல் மாவட்டத்திற்கு சென்று பிரியா அனுப்பிய முகவரியை வைத்து விசாரித்துள்ளார். ஆனால் அந்த முகவரியில் யாருமே இல்லை என்பது தெரிய வந்ததும் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி அதிர்ச்சி அடைந்த இளைஞர், இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரியா சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியை சேர்ந்த பெண் என தெரிய வந்துள்ளது. திருமணம் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பிரியாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பிரியா கணவரை இழந்தவர். இரண்டாவது திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இதுவரை அவர் 5க்கும்மேற்பட்ட வாலிபர்களை ஏமாற்றி சுமார் 12 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.