
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் மற்றும் அவரது மகன் லோகேஸ், உறவினரான கரிபிரானுடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாட ஏலகிரி மலைக்கு சென்றனர். வேட்டைக்கு சென்ற மூவரும், தங்களுக்கு தெரியாமல் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக விவசாயிகள் சட்ட விரோதமாக மின்சாரத்தை வயல்களை சுற்றி அமைத்திருந்த வேலியில் பயன்படுத்தியதால், இந்த துயர சம்பவம் நடந்தது. விவசாய நிலத்திற்கு வந்த விவசாயிகள், மூவரும் இறந்து கிடப்பதை கண்டதும் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மூவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மின்வேலியை உருவாக்க சட்டப்படி அனுமதி பெறாமல், மின்சாரம் திருட்டுத்தனமாக பயன்படுத்திய விவசாயி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.