
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் அனைத்திலும் இருந்து பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் பிருந்தாவனத்தை சேர்ந்த ஒருவர் மகா கும்பமேளாவிற்கு புனித நீராட வந்துள்ளார். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக அவரது பணம் திருடப்பட்டு விட்டது.
பணமும் முக்கிய ஆவணங்களும் இல்லாமல் வீடு திரும்ப முடியாமல் பரிதவித்துள்ளார். பின்னர் தனக்கு தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்கு தானே முயற்சி செய்து மிகக் குறைந்த செலவில் கும்பமேளாவில் ஒரு சிறிய தேநீர் கடையை ஆரம்பித்துள்ளார். அவர் எதிர்பார்த்ததைவிட தொழில் வேகமாக வளர்ந்து ஒரு நாளைக்கு ரூபாய் 2000 முதல் 3000 ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். நாட்கள் செல்ல அவரது வருவாய் ரூபாய் 50000ஆக உயர்ந்தது. இப்பொழுது அவர் முழு நேரமாக தேநீர் கடையை நடத்தி வருகிறார். இதனால் தனக்கு நல்ல லாபம் வருவதாக தெரிவித்துள்ளார்.
இதேபோன்று youtube சேனல் நடத்தி வந்த இளைஞர் ஒருவர் கும்பமேளாவில் ஒரு சிறிய தேநீர் கடையை அமைத்துள்ளார். இதற்கு “கும்பமேளாவில் தேநீர் விற்பனை” என்ற தலைப்பில் வீடியோவும் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. ஒரு சாதாரண தள்ளு வண்டியில் கும்பமேளாவில் தேநீர் மற்றும் தண்ணீர் விற்பனை செய்தார்.
இதில் தினம் தோறும் ரூபாய் 7000 முதல் 5000 வரை வருமானம் வருவதாகவும் வீடியோவில் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சிலர் ஒருநாள் 7000 ரூபாய் எனில் மாதம் தோறும் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம் என கணக்கிட்டும் கூறினர்.