கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரன்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வர்த்தக ஆலோசகர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து விவரங்களை பதிவு செய்த போது யூடியூப் சேனல்களுக்கு ரிவ்யூ கொடுத்தால் வருமானம் வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி கோபாலகிருஷ்ணன் செய்தவுடன் அவரது வங்கி கணக்கிற்கு மர்ம நபர் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் பணம் செலுத்தினால் மட்டுமே அடுத்த கட்டமாக ஆன்லைன் மூலம் வேலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதனை நம்பி கோபாலகிருஷ்ணன் பல்வேறு தவணைகளாக 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணம் வரை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் கூறியபடி வேலை தராமல் பணத்தை மோசடி செய்து விட்டார். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.