சீனாவின் ஹெனான் மாகாணம், zhengzhou நகரத்தில் BYD நிறுவனத்தின் மிகப்பெரிய இலகு மின்சார வாகன (EV) தொழிற்சாலை உருவாகி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ட்ரோன் மூலம் பிடிக்கப்பட்ட காட்சிகள் தற்போது உலகமெங்கும் பரவியுள்ளன. இந்த தொழிற்சாலை முழுமையாக உருவான பிறகு, சுமார் 50 சதுர மைல் பரப்பளவில் அமைந்திருக்கும் என்றும், இது சான் பிரான்சிஸ்கோவின் அளவையும் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ட்ரோன் வீடியோவில், உயரமான கட்டிடங்கள், உற்பத்தி கூடங்கள், ஊழியர்களுக்கான தங்கும் வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது ஒரு நகரத்தை போல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஏற்கனவே 60,000 பேர் பணியாற்றி வரும் நிலையில் இந்த நிறுவனம் 2025 முதல் காலாண்டில் 20 ஆயிரம் பேரை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் இளைய தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் பேக்கேஜ்கள், இலவச தங்கும் வசதிகள், உண்ணும் இடங்களில் நிவாரண விலைகள் உள்ளிட்ட பல நலவசதிகளும் வழங்கப்போவதாக தெரிவித்த இந்த BYD நிறுவனம் தற்போது டெஸ்லாவுக்கு மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்து வருவதற்கான ஒரு சாட்சி இது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.