
வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காவல்துறையினர் செங்குட்டை பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப் பொருள் குற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். இதில் டி.எஸ்.பி பழனி தலைமை வகித்தார். ஆய்வாளர் ஆனந்த் மற்றும் துணை ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கு வகித்தனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் டி.எஸ்.பி பழனி கூறியதாவது, அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான கஞ்சா,புகையிலை போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும். இந்தப் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
போதைப்பொருள் விற்பனை அல்லது கடத்தல் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும் காவல்துறையினருடன் இணைந்து போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தங்கள் தெருக்களிலோ அல்லது ஊர்களிலோ யாரேனும் புதிதாக தென்பட்டாலோ அல்லது சந்தேகம் படும்படி நடந்தாலோ உடனே காவல்துறையில் தகவல் கொடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
தங்களின் குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மக்கள் அதிகமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் போன்றவை உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் அதிக நேரம் மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்கள் கைபேசியை கேட்டவுடன் கொடுக்கவில்லை எனில் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கூறினார்.