தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வீர சிம்ம ரெட்டி திரைப்படம் வெளியாகி இருந்தது. சங்கரகாந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றபோது நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, தெலுங்கு திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரை குறிப்பிட்டு மரியாதை குறைவான விதத்தில் பேசி இருந்ததாக தெரிகிறது.

இதற்கு அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் பேரன் மற்றும் நடிகரான நாகசைதன்யா கண்டனம் தெரிவித்து உள்ளார். அதன்படி நடிகர் நாகசைதன்யா தன் சமூகவலைத்தள பக்கத்தில் “நந்தமுரி தாரக ராமராவ் (என்.டி.ஆர்), அக்கினேனி நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்கா ராவ் போன்றோரின் கலைத்திறன் தெலுங்கு திரை உலகின் தூணாகவும், பெருமைக்குரிய விஷயமாகவும் இருந்து வருகிறது. அப்படிப்பட்டவர்களை அவமரியாதைக்குள்ளாக்குவது நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதற்கு சமம்” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டை அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் மற்றொரு பேரனான அகில் அக்கினேனியும் பகிர்ந்து தன் கண்டனத்தை பகிர்ந்துள்ளார்.