இந்தியாவில் இந்த ஆண்டு பொது மருத்துவத் துறைகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு(NEET ) வரும் மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றனர். இதில் தேர்வு அழுத்தம் மற்றும் பயம் காரணமாக சில மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்வதும் நடைபெற்று வருகிறது.

இதுபோன்று சென்னை மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு  தயாராகி வந்துள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி கட் ஆப் மதிப்பெண்கள் பெறாமல் வெளியேறியுள்ளார்.

இதனால் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த தர்ஷினி இந்தாண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தேர்வு பயத்தால் ஏற்பட்ட மன உளைச்சலால் தேர்வை  எதிர்கொள்ள முடியுமா  என  பயந்து தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து  அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ஷினியின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு பயம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.