
கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் சிவில் இன்ஜினியரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 1/2 மாதங்களுக்கு முன்பு தினேஷ் குமாருக்கு பி.காம் பட்டதாரியான கிருபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தினேஷ்குமார் தனது மனைவியுடன் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றார்.
கடந்த 16-ஆம் தேதி தம்பதியினர் களியல் சிற்றாரில் சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். மறுநாள் மதியம் சாப்பிட்டு விட்டு விடுதியில் ஓய்வெடுத்தனர். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த கிருபாவை தினேஷ்குமார் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தொடங்க சிறிது நேரத்தில் கிருபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் தினேஷ்குமார் மற்றும் சொகுசு விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து அறிந்த கிருபாவின் உறவினர்கள் ஏற்கனவே கிருபா நோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்தனர்.
மேலும் கிருபாவின் தந்தை தண்டபாணி மற்றும் உறவினர்கள் கிருபாவின் சாவில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கிருபாவின் உடல் உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.