
திருவனந்தபுரம் ஆலப்புழா அருகே உள்ள பட்டனங்காடு பகுதியில் வசித்து வரும் ரமேசன் என்பவர் அப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியாக வந்த லாரி ஒன்று ரமேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதில் ரமேசன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அப்பகுதியாக வந்து கொண்டிருந்த நடிகை நவ்யா நாயர் தனது காரில் அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று சாலை ஓரத்தில் நிற்குமாறு கூறினார். ஆனால் லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்.
லாரி டிரைவருக்கு ஈடு கொடுக்கும் விதமாக நடிகை நவ்யா நாயரும் விடாமல் வெகு தூரம் துரத்தி சென்று அந்த லாரியை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சென்ற பட்டணங்காடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் தெரசா மற்றும் காவல்துறையினர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த ரமேசனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லாரி டிரைவரை மடக்கி பிடித்த நடிகை நவ்யா நாயரை காவல்துறையினரும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.