மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், புனேவை சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர், தனது பாஸ்போர்டில் உள்ள பக்கங்களை கிழித்து மறைத்து வந்தது குடியேற்ற அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இந்தோனேசியா வழியாக வியட்நாமிலிருந்து வந்திருந்தார்.

ஆனால் பாஸ்போர்டில் சில முக்கிய பக்கங்கள் இல்லாமல் இருப்பது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. விசாரணையில், அந்த நபர் தனது முன் பயணங்கள், குறிப்பாக பாங்காக்கிற்கு சென்றுள்ளதை தனது குடும்பத்திடம் இருந்து மறைக்கவே பாஸ்போர்ட்டில் இருந்த சில பக்கங்களை ஒரு வருடத்திற்கு முன் கிழித்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்த செயல் சட்டவிரோதமானதாகவும், அரசு ஆவணங்களை கையெழுத்து இல்லாமல் மாற்றியமைத்தது எனவும் கூறி, குடிவரவு அதிகாரி ராஜீவ் ரஞ்சன் குமார் சஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சம்பந்தப்பட்ட நபர் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 12 மற்றும் பாரதீய ந்யாயச் சனிதா (BNS) பிரிவு 318(4)ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பயண ஆவணங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. சட்டப்படி பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தற்போது அந்த நபர் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.