ஈரோடு மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் மெயின் ரோடு பகுதியில் வள்ளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மூத்த மகள் கௌரியுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி நுழைவு வாயில் பகுதியில் வைத்து மண்ணெண்ணைடை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மூதாட்டியை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி மனு அளிக்க வைத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் முத்து சரவணன் இறந்து விட்டார். எனக்கு 2 மகள்களும்,2 மகன்களும் இருக்கின்றனர். நான் எனது மூத்த மகள் கௌரியுடன் சீனாபுரம் பகுதியில் இருக்கும் சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட என்னை பரிசோதித்த டாக்டர் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக எனது மகன்களிடம் மருத்துவ உதவி கேட்டேன். ஆனால் இருவரும் உதவி செய்யவில்லை. இரண்டு மகன்களும் அரசு வேலையில் இருக்கின்றனர்.

கடந்த மாதம் 25-ஆம் தேதி சிகிச்சைக்காக எனது மகளுடன் மருத்துவமனைக்கு சென்ற போது 2 மகன்களும் கௌரியின் வீட்டு பூட்டை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மற்றொரு பூட்டை போட்டு பூட்டி சென்றனர். 2 மகன்களும் மருத்துவ உதவிக்கு பணம் தராமல், என்னை கவனிக்காமல் தொந்தரவு செய்கின்றனர். எனவே எனது மகன்கள் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.