இந்தூரில் 8 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கௌரி நகர் பகுதியில் நேற்று  நடைபெற்றது. குழந்தை நகுல், தனது வீட்டின் வெளியில் இருந்தபோது, சிவப்பு சேலையுடன் வந்த ஒரு பெண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சியில் அந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு சாலையில் வேகமாக செல்வது பதிவாகியிருந்தது. வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். குழந்தையின் தந்தை சந்தோஷ் சென் போலீசில் புகார் அளித்ததும், ஹீரா நகர் காவல் நிலைய போலீசார் சுற்றுவட்டார சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியாக இருந்த பெண்ணை அடையாளம் கண்டனர்.

 

அந்த பெண் அருகிலுள்ள நான்கு வீதிகள் தூரத்தில் வசித்து வருகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. போலீசார் அவரது வீட்டுக்கு சென்றபோது, குழந்தை நலமுடன் இருப்பதும் தெரியவந்தது. அந்த பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், சில மணி நேரத்திலேயே குழந்தை மீட்கப்பட்டதாக தெரியவந்தது. குழந்தையை கடத்திய காரணம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகள் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாலும் பெற்றோர் எப்போதும் குழந்தையை கவனத்துடன் பார்க்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக மாறியுள்ளது.