மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இரு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. பால்கர் மாவட்டத்தில் உள்ள மனோர் பகுதியில் மேம்பாலத்தின் மீது எண்ணெய் நிரம்பிய டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி பாலத்தில் இருந்து விலகி கீழே இருந்த சர்வீஸ் சாலையில் வேகமாக விழுந்து உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுநர் ஆசிஷ்குமார் யாதவ் (29) பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே சமயத்தில் மும்பை டாடர் பகுதியில் உள்ள அல்பின் ஸ்டோன் மேம்பாலத்தில் வேகமாக வந்த காரொன்று எதிரே வந்த டாக்ஸி மீது மோதியதில் டாக்ஸி ஓட்டுனர் சங்கர் கோலி வாடா (65) மற்றும் பயணி ரேகா பர்மார் (55) இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மட்டுங்கா பகுதியை சேர்ந்த பிரியன் ஷூ பான்ட்ரே(21) என்ற மாணவர் என தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது காரை வேகமாக ஓட்டி வந்து உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த இரு விபத்துகள்  குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.