இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், ரேஷன் கார்டு போன்ற பல அத்தியாவசியமான ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளதால் ஆதார் அட்டை தற்போது அனைத்து விதமான அரசு சாரா மற்றும் அரசு சார்ந்த பணிகளுக்கும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இப்படி முக்கியமான ஆவணமாக திகழும் ஆதார் அட்டையை பயன்படுத்தி சிலர் மோசடியிலும் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஆதார் அட்டைக்கு ரூ. 4,78,000 கடனாக கொடுக்கப் போவதாக ஒரு போலி லிங்க் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்த லிங்கை யாராவது கிளிக் செய்தால் உடனடியாக வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காணாமல் போய்விடுகிறது. இதன் காரணமாக ஆதார் அட்டைக்கு கடன் கொடுக்கப் போவதாக செல்போனுக்கு மெசேஜ் வந்தால் யாரும் அந்த மெசேஜை நம்பி லிங்கை தொட வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது போலியான செய்தி என்று மத்திய அரசின் PIB fact Check தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற போலி செய்திகள் நிறைய வருவதால் யாரும் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவேளை உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்தால் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் திருடப்பட்டு விடும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.