
தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதற்கு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புரிதல் இல்லாமல் பேசுவதாகவும், தமிழர்கள் மீது அக்கறை கொண்டே பெரியார் அவ்வாறு கூறியதாகவும் திமுக எம்பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பெரியார் எதற்காக சொன்னார் என்பதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழிலே உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் புதிய விஷயங்கள், அறிவியல் சார்ந்த விஷயங்கள், தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் வழியாக தமிழ் மக்களுக்கு வந்து சேர வேண்டும் என்பதற்காக அந்த காலத்திலேயே பலம் பெருமையை பேசிக் கொண்டு இருக்காதீர்கள்.
புதிய விஷயங்களை தமிழில் கொண்டு வாருங்கள் என்பதற்காக சொல்லப்பட்ட கருத்தை அடிப்படையிலேயே புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பிஜேபி பெரியார் கூறியதை எடுத்து சொல்கின்றனர். பெரியார் அக்கறையுடன் சொன்னார். எங்களை அவமானப்படுத்துவதற்கோ, அசிங்கப்படுத்துவதற்கோ அல்ல. பெரியார் எங்கள் தந்தை. அவர் பேசுவதற்கும் இன்னொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் தமிழர்களை பார்த்து காட்டுமிராண்டிகள் என்று பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.