வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் வி கோட்டா சாலையில் சிவன் கோயில் கட்ட வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இடம் ஒதுக்கியது. அந்த இடத்தில் சிவன் கோவில் கட்டி பொதுமக்களும் சிவனடியார்களும் வழிபட்டு தருகின்றனர்.

கோவில் வளாகத்தில் காலியாக இருக்கும் இடத்தில் அன்னதான கூடம் கோசாலை அமைக்க கோவில் நிர்வாகிகள் முடிவெடுத்தனர். கடந்த ஆண்டு அந்த இடத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுப்பணி துறையினர் முடிவு செய்தனர். இதற்கு சிவனடியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேறு இடம் தேர்வு செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகத்திற்கு வட்டாட்சியர் பதில் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுப்பணி துறையினர் முன்னறிவிப்பு இல்லாமல் கோவில் சுற்றுச்சுவரை உடைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட உள்ளதாக கூறினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும், பாஜகவினரும் மனுநீதி நாள் முகாமில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமரவேல் பாண்டியனிடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனால் குடியாத்தம் கோட்டாட்சியர் எம்.வெங்கட்ராமன் தலைமையில் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அறிக்கை சமர்ப்பித்த பிறகு இறுதி முடிவை மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பார் என கோட்டாட்சியர் கூறியுள்ளார்.