ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டம் பிடாரிப்பேட்டையில் வசிப்பவர் வினோத். இவரது வீட்டில் 2 வயதான ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வளர்க்கப்பட்டது. இந்த நாய்க்கு மேக்ஸ் என்று பெயரிட்டு இருந்தனர். இந்த நாய் குடும்பத்தில் உள்ள அனைவர்களிடமும் நெருக்கமாக பழகி வந்துள்ளது. இந்த நிலையில் குண்டூரில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை கடந்த 10 ஆம் தேதி பெய்தது. இந்த மழையில் வீட்டின் முன் கதவு திறந்து இருந்ததால் மேக்ஸ் நாய் வெளியே சென்றுள்ளது.

வெளியே சென்ற நாய் திரும்பி வராததால் வீட்டில் உள்ள அனைவரும் அப்பகுதி முழுவதும் சுற்றித்திரிந்து தேடியுள்ளனர்.இருப்பினும் நாய் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அண்டர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் நாய் பற்றிய விவரங்களை அச்சிட்டு துண்டு சீட்டுகளாக கொடுத்தனர். விளம்பரப் பலகைகள் வைத்து நாயை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் இந்த நாய் மழையின் காரணமாக ஒரு பகுதியில் ஒதுங்கி இருந்தது.இதனை பார்த்த ஆட்டோ ஓட்டுனர் அதற்கு பிஸ்கட் கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வைத்துள்ளார். நாயின் விளம்பரங்களை கண்ட ஆட்டோ ஓட்டுநர் அதில் உள்ள தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு நாயை வினோத்தின் குடும்பத்தினருடன் ஒப்படைத்தார். அந்த நாய் ஆட்டோ ஓட்டுனருக்கு நன்றி தெரிவிப்பது போல் காலை அசைத்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.