
கிருஷ்ணகிரியில் நடந்த போலி என்சிசி முகாம் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக காவல் துறையின் விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம், இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறி, போலீஸ் விசாரணை போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கொண்டு வந்து மாணவிகளை மிரட்டியது குறித்தும், அவரை பள்ளி நிர்வாகத்திற்கு அறிமுகப்படுத்திய புவன் என்ற நபர் இன்னும் கைது செய்யப்படாதது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிவராமனின் பின்னணி மற்றும் ஆயுதங்கள் எப்படி பள்ளிக்குள் கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டியுள்ளது. இருப்பினும், காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை வரும் 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அப்போது காவல் துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.