
செங்கல்பட்டு அருகே சினிமா பாணியில் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் பிரபல ரவுடிகளை கைது செய்ய திட்டங்களை தீட்டும் போது காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்திற்குள்ளையே, ஓரிரு அதிகாரிகள் வில்லன்களின் கூட்டத்திற்கு விசுவாசியாக இருந்து இங்கே நடக்கும் நிகழ்வுகளை அவர்களிடம் தெரிவித்து எச்சரிக்கை படுத்தும் பல காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், பணியாற்றி வந்த கோகுல் என்ற காவல்துறை அதிகாரி, செங்கல்பட்டு பகுதியை சுற்றியுள்ள ஒரு சில ரவுடிகளுக்கு ஆதரவாகவும், அவர்களோடு நெருங்கி பழகி வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ரகசிய புகார் ஒன்று அளிக்கப்பட, அதன் மீது விசாரணை நடத்தப்பட்டதில்,
கோகுல் செங்கல்பட்டு பகுதியை சுற்றியுள்ள சில ரவுடிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து கொண்டும், அதே சமயம் காவல்துறை தனிப்படை பிரிவில் ஓர் அங்கமாக பணிபுரிந்து கொண்டும் காவல்துறை சார்ந்த பல முக்கிய தகவல்களை பகிர்ந்து காவல்துறைக்கு எதிராக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதை கண்டறிந்து அதிர்ந்து போன மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதன் மீதான விரிவான விசாரணை மேலும் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.