தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அணி நகரில் சுருளியம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் முத்து பாண்டியன் அப்பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். நேற்று காலை சுருளியம்மாள் ஆலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் கேப்பை மாவு அரைத்து தருமாறு சுருளியம்மாளிடம் கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி வேலையாட்கள் இன்னும் வரவில்லை சிறிது நேரம் கழித்து வருமாறு அந்த பெண்ணிடம் கூறிக் கொண்டிருந்தார். திடீரென அந்த பெண் தான் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை சுருளியம்மாள் கண்ணில் தூவினார். இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் சுருளியம்மாள் அலறி துடித்தார்.

அந்த சமயம் அந்த பெண் சுருளியம்மாளின் கழுத்தில் கிடந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையே சுருளியம்மாவின் சத்தம் கேட்டு அருகே கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கு சென்று அந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் மஞ்சள் குளத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜோதிலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.