
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் ஒன்றாவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த கலா என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலா அடுக்குமாடி குடியிருப்பின் வாகனங்கள் நிறுத்துமிடம், மொட்டை மாடி உள்ளிட்ட பகுதிகளை சுத்தம் செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற கலா வீட்டிற்கு வராததால் அவரது மகள்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கலாவை தேடி வந்தனர். நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் கலா சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டு வேலை செய்ய வந்த கலா அதன்பிறகு ஏதோ ஒரு காரணமாக வேலைக்கு வரவில்லை என அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் நினைத்தனர். கழிவுநீர் தொட்டிக்கு அருகே சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மூடி திறந்து கிடந்ததால் நிலைதடுமாறி உள்ளே விழுந்து கலா உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அவரது சாவிற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.