விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் கண்ணுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மருமகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வருவேன். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வி.கள்ளிகுளத்தை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் எனது மருமகளுக்கு சத்துணவு பொறுப்பாளர் அல்லது அங்கன்வாடி மைய ஊழியர் வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கினார்.

ஆனால் இதுவரை எனது மருமகளுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை நேரில் சந்தித்து கேட்ட போதும் சில நாட்களில் வேலை வந்துவிடும் என கூறி காலம் தாழ்த்தி வருகிறார். மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார். இதே போல் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வருகிற 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.