கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது சிறுமியின் தந்தை நண்பரான காளீஸ்வரன் என்பவர் வீட்டிற்கு வந்து உனது தந்தை எங்கே? என கேட்டுள்ளார். அதற்கு அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு சென்று விட்டதாக சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என காளீஸ்வரன் கேட்டார்.

இதனால் சிறுமி வீட்டிற்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்துள்ளார். அப்போது அத்துமீறி உள்ளே நுழைந்த காளீஸ்வரன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். உடனே சிறுமி அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் காளீஸ்வரன் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் காளீஸ்வரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.