கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். தினமும் கௌசல்யா தனது கணவருடன் அந்த பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது விளக்கம். நேற்று காலை ராஜ்குமார் நடைபயிற்சிக்கு வராததால் கௌசல்யா மட்டும் தனியாக நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது ஜி.வி ரெசிடென்சியில் இருக்கும் பேக்கரி கடை அருகே வைத்து காரில் வந்த மர்ம நபர்கள் கையை வெளியே நீட்டி கௌசல்யா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

உடனடியாக கௌசல்யா சுதாரித்துக் கொண்டு தங்க சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். இதற்கிடையே நிலைத்தடுமாறி கௌசல்யா கீழே விழுந்தார். இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கௌசல்யா சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.