கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சதாசிவம்- புவனேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புவனேஸ்வரி சரவணம்பட்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர வேலை இருப்பதாக கூறி ஒரு மெசேஜ் வந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்த போது புவனேஸ்வரி டெலிகிராம் செயலி குரூப்பில் இணைந்தார். இதனையடுத்து புவனேஸ்வரியை தொடர்பு கொண்டு பேசிய மரம் நபர் குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார்.
இதனை உண்மை என்று நம்பி முதற்கட்டமாக புவனேஸ்வரி 2000 ரூபாய் பணத்தை செலுத்திய பிறகு அவருக்கு மொத்தம் 2 ஆயிரத்து 800 ரூபாய் திரும்ப கிடைத்தது. இதனை தொடர்ந்து பல்வேறு தவணைகளாக புவனேஸ்வரி 8 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கூறியபடி லாப தொகை கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த புவனேஸ்வரி கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.