
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி. மழவராயனூர் கிராமத்தில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காத்தாயி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் காத்தாயி மாட்டுக்கு புற்கள் அறுப்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து புற்களை அறுத்துக் கொண்டு திடீரென எழுந்த காத்தாயியின் மீது தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் காத்தாயியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மின்வாரியத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் போலீசார் காத்தாயியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.